விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது, விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களை ஏப்ரல் ஏழாம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்தநிலையில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நளினி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தன்னை விடுவிக்க கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினி எனவும் குறிப்பிட்டார். ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளின் கடமை தவறும் போது நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
10 ஆண்டு, 14 ஆண்டு மற்றும் 20 ஆண்டுகள் சிறையில் தண்டனை பெற்றவரை விடுவிப்பதற்கான சட்டம் தமிழகத்தில் உள்ளது எனவும், அதன் அடிப்படையில் 2002ஆம் ஆண்டே விடுதலைக்கு நளினி தகுதி பெற்றிருந்தார் எனவும் வாதிட்டார்.
ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க கோரிய இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் ராஜீவ் கொலை வழக்கில் நளினி ஆயிரத்து 991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.






