ஈபிஎஸ் புளிப்பு காமெடி செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்!
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து ஈபிஎஸ் புளிப்பு காமெடி செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளிவிவரங்களுடன் பல முறை அறிக்கையாகத் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணி வைத்துள்ள பாஜக அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருவதாகவும், அதை பொறுக்க முடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு ஈபிஎஸ் மீண்டும் மீண்டும் விமர்சனங்களை முன்வைப்பதாகவும் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தொழில் முதலீடுகள், பொருளாதார வளர்ச்சி குறித்து அடிப்படை அறிவற்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளிப்பதைவிட, ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும் என்றும் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





