மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது… தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 99.90 அடியாக உயர்ந்து பிற்பகலில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் டெல்டா பாசனத்திற்கு போதிய தண்ணீர் கடைசி வரை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய பருவமழை பெய்ததால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மேட்டூர் அணை நிரம்பியது. தொடர்ந்து 3 முறை அணை நிரம்பியதால் டெல்டா விவசாயம் செழித்தது. இந்தாண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணை மீண்டும் பாசனத்திற்கு நீர் திறக்கும் வரை நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே இருந்தது சாதனையாக பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு உரிய தேதியில் (ஜூன் 12) அணை திறக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் தென் மேற்கு பருவ மழை சுமார்தான், இதனால் மேட்டூர் நீர்மட்டம் கிடுகிடுவென 63 அடிக்கு கீழாக சரிந்தது. ஆனாலும் கர்நாடகாவில் அவ்வப்போது கன மழை பெய்ததால் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி விவசாயிகளை நிம்மதியடையச் செய்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,102 கனஅடியில் இருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.90 அடியாகவும், நீர் இருப்பு 64.71 டி.எம்.சி.யாகவும் உயர்ந்துள்ளது.
இன்று பிற்பகலுக்குள் நீர் மட்டம் 100 அடியை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக டெல்டா பகுதி பாசனத்துக்கு வினாடிக்கு 14,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரியில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 26,500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாகச் சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இந்தாண்டும் டெல்டா விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







