--- --:--:-- --

மேற்கு ஆப்பிரிக்காவில் வேலைக்கு சென்ற இந்திய என்ஜினீயர் மர்மச்சாவு!உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி கண்ணீர் மனு!!

fda3f4a5-489d-41f0-830f-233271981ffd

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்துள்ள புலவனூரைச் சேர்ந்தவர் பால்கனி மகன் பொன்னுராஜ் (வயது 52). மின்தொழில்நுட்ப என்ஜினீயரான இவருக்கு மெர்சி லில்லி (வயது 45) என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் மேற்கு ஆப்பிரிக்காவில் சியாரா லியோன் என்ற நாட்டில் உள்ள மெக்கேனி என்ற நகரத்துக்கு உயர்மின்கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு சென்றார். இதற்காக மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தனர்.

 

அப்போது தன்னுடன் தமிழ்நாட்டை சேர்ந்த சில ஊழியர்களையும் உடன் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. வேலைக்கு சென்ற இடத்தில் பொன்னுராஜ் அழைத்துச் சென்ற ஊழியர்கள் சரிவர வேலை செய்யாததால் இந்த பணிக்கு ஒப்பந்தமிட்ட கம்பெனி இவர்களை கண்டித்துள்ளது. இதனால் கடந்த 3 மாதமாக இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், தங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், தங்களுக்குரிய தொகையை வழங்க வேண்டும் எனவும் பொன்னுராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா பேரிடர் நிலவி வரும் சூழ்நிலையில் திடீரென அந்த கம்பெனி நிர்வாகம் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. பொன்னுராஜிக்கு எதிராக அவருடன் சேர்ந்து காண்டிராக்ட் எடுத்த சிலரும் ஊழியர்களை தூண்டிவிட்டு இந்திய தூதரகத்துக்கும், அந்த நகரில் உள்ள போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். மேலும் இவர்களுக்கான மொத்த செலவையும் இவர்களை அழைத்துவந்த பொன்னுராஜ்தான் ஏற்க வேண்டும் என மிரட்டி கையெழுத்தும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு சில ஊழியர்களுடன் விசாரணைக்காக சென்றுவிட்டு தனது அறைக்கு திரும்பியதாகவும், அப்போது நடைபயிற்சிக்கு சென்றுவருவதாக கூறிய அவர் சில மணித்துளிகளில் சுருண்டுவிழுந்து அருகில் உள்ளவர்களால் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் பொன்னுராஜ் குடும்பத்திற்கு உடன் பணியாற்றும் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் பொன்னுராஜின் மனைவி மெர்சி லில்லி இது தொடர்பாக இந்திய தூதரகத்தில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், சில மணி நேரத்திற்கு முன் தனக்கு போன் செய்து முழுஉடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதாக கூறியதிலும் வலுத்த சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த ஊழியர்கள் தெரிவிகையில், பொன்னுராஜ் மொபைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக கூறிய நிலையில், அவர் இறந்த தகவலையும், புகைப்படங்களையும் அந்த மொபைலில் இருந்தே அந்த ஊழியர்கள் அனுப்பியதாகவும், எனவே எனது கணவர் சாவில் முழுக்க முழுக்க மர்மங்கள் நிறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். மேலும் தனது கணவர் உடலை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் எனவும், இதற்கான நடவடிக்கையை இந்திய அரசும், இந்திய தூதரகமும் செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இந்திய என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


“தனது கணவர் உடலை மீட்டுத்தரக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்பிக்கள் கனிமொழி, கவுதம் சிகாமணி ஆகியோருக்கும் பொன்னுராஜின் மனைவி மெர்சி லில்லி கண்ணீர் மல்க மனு அனுப்பியுள்ளார்.”


📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon