முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? – கனிமொழி
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று அழைப்பு விடுத்துள்ள தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் புறக்கணித்துள்ளன. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கத் தமிழக எம்பிக்களின் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சி எம்பிக்களுக்கும் தமிழ்நாடு இல்லம் மூலம் அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டுமானால் மேகதாது அணை விவகாரம் குறித்தும் விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்துள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துவிட்டு தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது என விமர்சித்துள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அதிமுகவும் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதேநேரம் அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் டெல்லியில் இருக்கின்றனர். இதன்மூலம் அவர்கள் கூட்டத்தை புறக்கணிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் திமுகவும் புறக்கணிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்தார். தவெக நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி கூறியிருக்கிறார். மேலும் மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கனிமொழி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதிலும் Fair Delimitation என்பதிலும் எங்கள் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனது முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு இன்னும் கையில் கிடைக்கப்பெறவும் இல்லை.
இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஏற்கெனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் தெரிவித்துவிட்டோம். அதனை ஒருமனதாக நிறைவேற்றிய கட்சிகளுக்கும் அதே நிலைப்பாட்டில் உள்ளபோது, முதலமைச்சர் கூட்டும் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தக் கட்சிகளை மாற்ற வேண்டும் என்றா? காவிரி விஷயத்திற்காகப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல், காவிரி பிரச்சினையைத் திசைத்திருப்ப தவெக அரசு நடத்தும் நாடகம்தான் இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம்.
எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.உழவர்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளை அனுப்ப முதலமைச்சர் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




