எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவை திரும்பப்பெற வேண்டும் – தி.மு.க
வெளிநாட்டு பங்களிப்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.க எம்.பி வில்சன் தலைமையிலான மற்றும் இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முன்னணி மதத் தலைவர்களை உள்ளடக்கிய ‘சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின்’ தூதுக்குழு, 6.8.2026 அன்று உள்துறை அமைச்சரைச் சந்தித்தது.
கடந்த மார்ச் 2026-ல் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்.சி.ஆர்.ஏ திருத்த மசோதா 2026-ஐத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம், 2010-ன் பிரிவு 15-ஐ ரத்து செய்ய வேண்டும் அல்லது இந்த மசோதாவை, எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வறிக்கையோடு இணைந்து ஒரு ‘நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின்’ பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவின் சரத்துகள் ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்கங்கள் காரணமாக, ஆரம்பத்திலிருந்தே இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க இக்கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளின் நலன் கருதி, இக்குழுவின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக்கூட்டத்தொடரிலேயே தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




