பாஜக திட்டத்தை கையில் எடுத்த மம்தா பானர்ஜி!
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. ஐந்து மாநிலத் தேர்தல்களில், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலத் தேர்தல்கள் அனைவரிடத்திலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
1967ஆம் ஆண்டு தேர்தலோடு தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் இருந்து தேசியக் கட்சி அகற்றப்பட்டது. அதன்பிறகு தற்போதுவரை இங்கு திமுக – அதிமுக என இரு மாநில கட்சிகளே தொடர்ந்து ஆட்சியை பிடித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக மீண்டும் தொடர்ந்து திமுக ஆட்சி அமையுமா என்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவில் கேரளம் மாநிலத்தில் மட்டுமே பெரும் பலத்துடனும் ஆட்சி கட்டிலும் இருக்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்குமா என்பது அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மத்திய பாஜக அரசை கடுமையாக சாடிவரும் முதல்வர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இவர் அம்மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்து வருகிறார். இந்தத் தேர்தலில், பாஜகவை எதிர்த்து வென்று மீண்டும் நான்காவது முறையாக அவர் ஆட்சியைப் பிடிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில், 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கம் மாநிலத்தில், 144 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 16ஆம் தேதி பாஜக வெளியிட்டது. இதில், 2020 வரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இருந்து பிறகு பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
2021 தேர்தலில் மம்தா பானர்ஜி முதலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இதனால், பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரானார் மம்தா பானர்ஜி.
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாளான நேற்று (17ஆம் தேதி) திரிணாமுல் காங்கிரஸ் தனது 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில், சுவேந்து அதிகாரியை எதிர்த்து பபித்ரா கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுவேந்து அதிகாரியின் நெருங்கிய உதவியாளராக இருந்து வந்த பபித்ரா கர், கடந்த 2020 சுவேந்து அதிகாரியுடன் சேர்ந்து பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி அன்று பாஜகவில் இருந்து விலகி பபித்ரா கர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அப்படி இணைந்த மறுநாளே, அதாவது நேற்று (17ஆம் தேதி) திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் நந்திகிராம் வேட்பாளராக பபித்ரா கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.





