--- --:--:-- --

திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிப்பு…! தெற்கு மாவட்ட செயலாளராக மகேஷ் அன்பில் பொய்யாமொழிக்கு பொறுப்பு!!

22

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கே.என்.நேரு கட்சியின் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றதால், அவர் வகித்த மாவட்ட செயலாளர் பதவியில், திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் இதுவரை திருச்சி தெற்கு, வடக்கு என இரு மாவட்டச் செயலாளர் பதவியிடங்கள் இருந்தது. தெற்கு மாவட்ட செயலாளராக கே.என்.நேருவும், வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் செயல்பட்டு வந்தனர். இதில் கே.என்.நேரு 27 ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி வகித்து வந்தார்.

 

இந்நிலையில் கே.என்.நேருவுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், நிர்வாக ரீதியில் திருச்சி மாவட்ட திமுக, திருச்சி மத்தி, திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

அதன்படி திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட செயலாளராக வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார். திமுகவில், உதயநிதி ஸ்டாலின் எப்படி 3-ம் தலைமுறை வாரிசோ அதே போல் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஆவார்.

 

மகேஷ் பொய்யாமொழியின் தாத்தாவும் அன்பில் தர்மலிங்கமும் கருணாநிதியும் ஒரே கால கட்டத்தில் திமுகவில் முக்கிய நண்பர்களாகவும், பொறுப்பிலும் இருந்தனர். அதே போல் மு.க.ஸ்டாலினும் மகேஷின் தந்தை அன்பில் பொய்யாமொழியும் திமுகவில் இணைபிரியா நண்பர்களாக இருந்தனர்.

 

அன்பில் பொய்யாமொழி இளம் வயதிலேயே திடீரென மரணமடைந்ததால், அவருடைய மகன் மகேஷ் அன்பில் பொய்யாமொழி அரசியலுக்கு வந்து உதயநிதி ஸ்டாலினின் உற்ற நண்பராகவும், எம்.எல்.ஏ.வாகவும், இளைஞரணி மாநில துணைச் செயலாளராகவும் உள்ளார். தற்போது திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon