பெட்ரோலை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து! வாளியில் பிடித்து சென்ற பொதுமக்கள்!
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே பெட்ரோல் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அவ்வழியாக சென்ற மக்கள் பெட்ரோலை வாளியில் பிடித்து சென்றனர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா துறைமுகத்தில் இருந்து பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி விஜயவாடா அருகே உங்குத்துவாரில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனம் வந்ததால் வாகனத்தை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால் லாரியின் டேங்கில் இருந்த பெட்ரோல் சாலையில் கொட்டியது.
இதனை அறிந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்த பக்கெட்டுகள், கேன்களை கொண்டுவந்து பெட்ரோலை பிடித்து சென்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். பெட்ரோல் சாலையில் சிந்தியிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.






