அசாம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடைசி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். உகாய்நூர் பகுதியில் வேலை தேடி வந்த தம்மை 6 பேர் கொண்ட கும்பல் முட்புதர் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாம் மாநில பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஒவ்வொருவராக 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கடைசி நபரை தீவிரமாக தேடிவந்தனர். அந்த நபர் மதுரையில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்று அவரை கைது செய்து அழைத்து வந்தனர்.
பல்லடம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு ஆய்வுக்காக சென்ற கோவை சரக டிஐஜி நரேந்திர நாயர் விரைவாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த போலிசாருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.







