குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா.பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழா கடந்த வாரம் 02 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனை தொடர்ந்து மூலவர் அபிஷேகம்,உற்சவர் மலை வலம் வருதல்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும்,ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் மற்றுமொரு அங்கமான திருக்கல்யாண உற்சவமும்,முருகன்,வள்ளி,தெய்வானையுடன் சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து உற்சவர் யானை வாகனத்தில் மலை வலம் வருதல் நிகழ்வும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தைப்பூசத்திருத்தேர் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ” திருத்தேர் வடம் பிடித்தல் ” நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ” அரோகரா அரோகரா ” கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அப்போது, ” அரோகரா அரோகரா ” கோஷம் விண்ணை பிளந்த படி இருந்தது.

விழாவில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ்,மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ்,தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நித்யா நந்தகுமார்,மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜ்,முன்னாள் காரமடை பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமஜோதி செய்தார்.இவ்விழாவில் கோவை,நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பாதையாத்திரையாகவும் பக்தர்கள் வந்திருந்தனர். நீலகிரி,கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்களின் வசதிக்காக காரமடை,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் செய்திருந்தது.

மேலும் , பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






