2-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி…! டி20 தோல்விக்கு பழி தீர்த்து தொடரை வென்றது நியூசி.!!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி கண்டு தொடரையும் இழந்துள்ளது. இதன் மூலம் டி 20 தொடரை 5 – 0 என இழந்த நியூசிலாந்து, ஒரு நாள் தொடரை கைப்பற்றி பழி தீர்த்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. தொடர்ந்து 5 போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்ற இந்தியா 5 – 0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்தது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.
டி20 தொடரை அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் முதலில் பேட் செய்த இந்திய அணி அபாரமாக ரன் குவித்து 347 ரன்கள் என்ற இமாலய ஸ்கோர் எடுத்தது. ஆனால் டி20 தொடரில் பெற்ற தோல்வியிலிருந்து எழுச்சி பெற்ற நியூசிலாந்து, இந்த இமாலய இலக்கை அசால்ட்டாக விரட்டிப் பிடித்து வெற்றி பெற்றது. டி20 போட்டிகளில் முக்கிய கட்டங்களில் அவுட்டாகி தோல்விக்கு காரணமாக இருந்த ராஸ் டெய்லர், இந்தப் போட்டியில் சதமடித்து கடைசி நிமிடம் வரை ஆட்டத்தை கொண்டு சென்றதால் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றி தந்த உற்சாகத்தில், இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து திறமையை வெளிப்படுத்தி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கி விட்டது.
இன்று நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் குப்டில் (79), நிகோல்ஸ் (41) அதிரடி காட்டினாலும், அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி நடையைக் கட்டினர். இதனால் 197 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஆனால் இந்த முறையும் அதிரடி காட்டிய ராஸ் டெய்லர் கெத்து காட்டினார். அவருக்கு ஜமைசன் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க இருவரும் சேர்ந்து 50 ஓவர் வரை விக்கெட் விழாமல் அணியை கரை சேர்த்தனர். முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது நியூசி.அணி .ராஸ் டெய்லர் 73 ரன்கள், ஜமைசன் 25 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கல் தான். தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் (3), பிரித்விஷா(24) சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். கேப்டன் கோஹ்லியும் (15) ஏமாற்றினார். தொடர்ந்து ராகுல் (4), கேதார்ஜாதவ் (9) கை விட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் (52) அரைசதம் அடித்து அவுட்டாக இந்தியா 130 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் ஜடேஜா மட்டும் நம்பிக்கை தரும் வகையில் ஆட, தாக்கூர் (18) வீழ்ந்தார்.
ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த சைனி (45) அதிரடி காட்ட இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு மீண்டும் திரும்புவது போல் நம்பிக்கை இருந்தது. ஆனால் சைனி அவுட்டான பின் வந்த சஹால் 10 ரன்னில் வீழ, கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. 49 வது ஓவரை ஜடேஜா எதிர்கொண்டதால் நம்பிக்கை இருந்தது. ஆனால் முதல் இரு பந்துகளில் ரன் எடுக்க திணறிய ஜடேஜா மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கியடிக்கப் பார்த்தார். ஆனால் கேட்ச் கொடுத்து ஐடேஜா (55) அவுட்டாக, இந்தியா 48.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 -0 முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது. டி20 தொடரில் 5-0 என இந்தியாவிடம் பெற்ற தோல்விக்கு, பழிக்குப் பழியாக இந்த ஒரு நாள் தொடரை கைப்பற்றி ஆறுதல் அடைந்துள்ளது நியூசிலாந்து .






