--- --:--:-- --

கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு! திமுக 174 இடங்களில் போட்டி!

Eswaran Stalin

திமுக கூட்டணியில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திமுக அணியில் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. திமுக மட்டும் 174 இடங்களில் போட்டியிடுகிறது.

 

வரும் 6ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்குகிறது; இது 19ஆம் தேதி ் நிறைவடைகிறது. தேர்தல் பிரசாரங்களுக்கு குறைந்த அவகாசமே உள்ளதால், அரசியல் கட்சிகள் பிரசாரப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

 

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகளும் தலா 6 இடங்களை பெற்றுள்ளன. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி, ஆதித்தமிழர் பேரவை கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்தது.

 

அதேநேரம், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்டுள்ள, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் உடன்பாடு எட்டப்படவில்லை. கொ.ம.தே.க. சார்பாக ஈஸ்வரன், சக்திகோச் நடராஜன், தங்கவேல் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் பங்கேற்ற்றனர். 2 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 3 தொகுதிகளை கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், இன்று மாலை திமுக – கொமதேக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன்படி, கொமதேகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும். அந்த தொகுதிகளில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிடுகிறது. நாளை மாலைக்குள் போட்டியிட உள்ள தொகுதிகள் குறித்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததுபோக, தற்போது தி.மு.க வேட்பாளர்கள் 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து, 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறங்குவார்கள்.

Leave a Reply

Right Menu Icon