விடிய விடிய நடந்த ஆலோசனை… அதிமுகவுக்கு பாமக – பாஜக நெருக்கடி! திணறிப்போன ஓபிஎஸ் – ஈபிஎஸ்!!
வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டிருந்த நிலையில், கூடுதல் தொகுதி கேட்டு பாமக, பாஜக கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால், ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ் இருவரும் திண்டாடிப் போயுள்ளனர். விடிய விடிய நடந்த ஆலோசனைக்கு பிறகும் முடிவு வெடுப்பதில் குழப்பமே மிஞ்சியது.
வரும் 6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 12) தொடங்குகிறது. இம்முறை தேர்தலில், முதல் நபரான பாமகவுடன் தொகுதி உடன்பாடு, முதல் ஆளாக வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்று ஆரம்பத்தில் அதிமுக வேகம் காட்டியது. கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் வேட்பாளர் பட்டியலை, நாள் கிழமை பார்த்து வெளியிட்ட அதிமுகவால், அதன் பின்னர் அதே வேகத்தை காட்ட முடியவில்லை.

அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகளை பெற்றுள்ளன. தொகுதி உடன்பாடு எட்டுவதில் கடைசிவரை ‘தலைவலி’யாக இருந்து வந்த தேமுதிக, நேற்று திடுதிடுப்பென கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறியது. அப்பாடா இனி வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து, நல்ல நாளான இன்று (மார்ச் 10) வெளியிடலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டது. வேட்பாளர்கள் தேர்வில் ஓ.பி.எஸ். – இபிஎஸ் இருவரிடையே போட்டாபோட்டி ஏற்பட்டது. தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுத்தருவதில் இருவரும் காட்டிய ஆர்வத்தால், அதில் சிக்கல் ஏற்பட்டது. ஒருவழியாக, 60 – 40 சதவீதம் என்ற அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது என்ற முடிவு இருவரும் வந்ததாக கூறப்படுகிறது.
இதையெல்லாம் கடந்து, ஒருவழியாக அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணியை தொடங்கிய போது, பாமக – பாஜக வடிவில் அடுத்த தலைவலி ஆரம்பமானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் நேற்றிரவு தொடங்கிய ஆலோசனை, விடிய விடிய நடந்துள்ளது. அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 10) வெளியிடும் நோக்கில், தூங்காமல் அதிமுக தலைவர்கள், பட்டியலை இறுதி செய்துள்ளனர்.
அத்துடன், தொகுதிப் பங்கீடு முடிந்த பாமக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் என்னென்ன என்றும் ஆலோசனை நடைபெற்றது. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில் அதிமுக எதிர்பாராத புதிய நெருக்கடிக்கு ஆளானது. பாமகவும், பாஜகவும் புதிய கோரிக்கையை வைத்து, அதிமுகவை திணறச் செய்தன.

தேமுதிக கூட்டணியை விட்டுவிலகியதால், தங்களுக்கு கூடுதல் இடம் தேவை என்று, பாமக தரப்பில் புதிய கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். நாங்கள் ஏற்கனவே 28 தொகுதிகள் கேட்டிருந்தோம். தேமுதிகவைக் காரணம் காட்டித்தான் அதிக தொகுதிகள் தர முடியாது என்று கூறினீர்கள். இப்போது தேமுதிகதான் போய்விட்டதே. நாங்கள் கேட்ட எண்ணிக்கையில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று ஜி.கே. மணி கேட்டிருக்கிறார்.

பாஜக மட்டும் சும்மா இருக்குமா? பாஜக தலைவர் எல்.முருகனும், தேமுதிக தான் வெளியேறிவிட்டதே, எங்களுக்கு இன்னும் 10 தொகுதிகளை கொடுக்கலாமே என்று காதை கடித்துள்ளார்.
இரு கட்சிகளின் இந்த திடீர் கோரிக்கையை எதிர்பாராத அதிமுக தலைமை, கடைசி நேரத்தில் இப்படி செய்கிறீர்களே? வேட்புமனு தாக்கலே தொடங்கப் போகிறது. இன்னமும் பட்டியலை ரெடி செய்யாமல் இருக்கிறோம். நீங்கள் இப்படிக் கேட்டால், எப்படி தேர்தல் பணிகளை தொடர்வது என்று கேட்டதாம். பாஜக, பாமகவுக்கு தொகுதிகளை முடிவு செய்துவிட்ட நிலையில், சைக்கிள் கேப்பில் இரு கட்சிகளும் ஆட்டோ ஓட்டப் பார்க்கின்றனவே என்று அதிமுக தலைமை எரிச்சல் அடைந்தது.
ஒருவழியாக அவர்களை சமாளித்து, போட்டியிடும் தொகுதிகளை அதிமுக தலைமை இறுதி செய்துள்ளது. அத்துடன் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் ஏறக்குறைய முடிவாகிவிட்டது. நல்ல நாளான இன்று, இரண்டாம் கட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.





