--- --:--:-- --

ஜன நாயகன்’ படம் வெளியாகும் தேதி? – இன்று உயர்நீதிமன்றம்

2

ன நாயகன் படத்தின் தணிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஆனால் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தணிக்கை குழுவை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்ததால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்னைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்.

இதற்கிடையே, ’ஜனநாயகன்’ பட சென்சார் விவகாரத்தில் திரை பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயகனுடன் போட்டிபோடும் என எதிர்பார்க்கப்பட்ட ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ள ரவி மோகன், ’ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.

ஒரு சகோதரராக விஜயின் பக்கம் நிற்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜனநாயகன் படம் வெளியாகும் போதுதான், பொங்கல் கொண்டாட்டம் தொடங்கும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைவிட பெரிய புயல்களை விஜய் கடந்து வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நடிகர் சிலம்பரசன், இதுவும் கடந்து போகும் எனப் பதிவிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சினிமாவிற்கு தற்போது இக்கட்டான காலம் எனத் தெரிவித்துள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், காலக்கெடுவிற்கு தணிக்கை குழு வைத்துள்ள கடுமையான விதிமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். என்ன நடந்தாலும், இந்திய சினிமாவில் இது விஜயிற்கு மிகப்பெரிய வழியனுப்பு விழாவாக அமையும் என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். ’ஜனநாயகன்’ படம் வெளியாகும் போதுதான் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கும் என்று நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.

Right Menu Icon