--- --:--:-- --

ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் வருமானவரித்துறை சோதனை! ரூ.5 கோடி சிக்கியது

IT raid 03

தேர்தல் நெருங்கும் நேரத்தில், ரூ.250 கோடி பணப்பரிமாற்ற புகாரை அடுத்து, கரூரில் ஜவுளி ஏற்றுமதி, நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தினர். ரூ. 5 கோடி பறிமுதல் செய்த நிலையில், நிதி நிறுவன வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். இதற்காக தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

அதுமட்டுமின்றி திடீரென அதிகளவில் பணப்பரிமாற்றம் நடப்பதை அதிகாரிகள் கண்காணித்து, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், கரூரில் செயல்படும் நிதி நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் அதிகளவில் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் கரூர் நகரில் உள்ள நிதி நிறுவனங்கள் அவற்றுடன் தொடர்புடைய ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள் என கரூரில் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் கரூர் செங்குந்தபுரம், ராம் நகர் ஆகிய இடங்களில உள்ள ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்கள், கரூர் 80 அடி சாலையில் உள்ள நிதி நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் வீடுகள் என 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

 

கடந்த 10 நாட்களில் 4-5 நிதி நிறுவனங்களில் ரூ.250 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இத்தகைய பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதா என, இது தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். மேலும், இது தொடர்பாக, ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.5 கோடி வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

கரூர் 80 அடி சாலையில் உள்ள ஒரே கட்டிடத்தில் 5 நிதி நிறுவனங்கள் உள்ள வளாகத்திற்கு வருமான வரித்துறையினர் நேற்றிரவு சீல் வைத்தனர். இது தவிர, மேலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon