தவறு செய்பவர்கள் ஊடகத்தினரை கண்டு அஞ்சுவது இயல்பு – கோவை ரயில்வே நிர்வாகம் அஞ்சுவது ஏன் ? பி.ஆர்.நடராஜன் எம்பி கேள்வி !!!
கோவையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் ரயில்வே நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளதா என்பதை செய்தி சேகரிக்க சென்ற ஊடகத்தினரை கோவை ரயில்வே நிர்வாகம் தடுத்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
புலம் பெயர்ந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்ப கடிதம் பெறப்பட்டு தமிழக அரசால் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றனர் எனவும்,இதன் ஒருபகுதியாக கோவையிலும் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் தங்களது கடமைகளை சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஊடகத்தினரின் கடமை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் என்கிற பேரிடர் காலம் என்றாலும் தங்களது கடமையை திறம்பட ஊடகவியலாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்நிலையில் கோவை ரயில்நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என கோவை ரயில்வே ஏ.டிஆர்.எம் ரயில்வே காவலர்களை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளார் என்கிற தகவலும், சில ஊடகவியலாளர்களை சிறைபிடிப்பதுபோல் பிடித்து வைத்தனர் என்கிற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவறு செய்பவர்கள் ஊடகத்தை கண்டு அஞ்சுவது இயல்பானது. கோவை ரயில்வே நிர்வாகம் ஊடகத்தை கண்டு அஞ்சுவதற்கான காரணம் புதிராக இருக்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து விசாரிக்கையில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. ரயில்நிலையத்தில் உள்ள கழிவரைகளை பயன்படுத்த விடாமல் பூட்டி வைத்திருப்பதாகவும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றும், ரயில்பெட்டிகள் சுகாதாரமாக இல்லை, பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்து தரப்படவில்லை என அடுத்தடுத்து புகார்கள் வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இதன்காரணமாகத்தான் ஊடகத்தினரை அனுமதிக்கவில்லையா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும்,சிறந்த ரயில் நிலையம் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற கோவை ரயில்நிலையத்தின் பெருமையை சீர்குலைக்கும் விதமாக கோவை ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை ஏற்கமுடியாது. இந்த சிறப்பு ரயில்களில் செல்பவர்கள் யாரும் இலவசமாக செல்லவில்லை. அதற்கான கட்டணத்தை செலுத்தி மாவட்ட நிர்வாகம் பயணச்சீட்டை ஒவ்வொருவரிடம் கொடுத்துத்தான் தொழிலாளர்கள் அனுப்பப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்,உடனடியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்தவும், ரயில்நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதருவதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். நாங்கள் பொறுப்போடுதான் செயல்படுகிறோம் என்பதை உறுதிப்படுத்த ரயில்நிலையத்திற்குள் ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும்,வேலையிழந்து, வருவாய் இழந்து, பசி, பட்டினி என்கிற கொடும்துயரத்தை சுமந்து கொண்டு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும்போதாவது உரிய வசதிகளுடன் செல்ல உரிய ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ரயில்வே நிர்வாகம் செய்துதர வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.







