இந்திய பணியாளர்களுக்கான பணி விசா நிறுத்தம் – இந்தியா மீது திட்டமிட்டு தாக்குதல்!
இந்திய பணியாளர்களுக்கான பணி விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் அறிவிப்பு இந்தியா மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு உள்ள மிகப்பெரிய தாக்குதல் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் எச் 1 பி விசாவை பெறுவோரில் 75% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அமெரிக்காவில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் தொழில்நுட்பத்திலும், மருத்துவத்திலும் அறிவுசார்ந்த முன்னேற்றத்திற்கு இந்தியர்கள் பெரும் பங்களித்து வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திட வேண்டும் என்று கூறியுள்ள ஸ்டாலின் அமெரிக்க அரசின் இந்த நியாயமற்ற முடிவு அந்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இந்திய பணியாளர்களின் வாழ்க்கையை மோசமாக பாதிப்பது வேதனை அளிப்பதாகவும் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் படித்து முடித்து வேலை தேடுவதற்கும் இந்த விசா நிறுத்தம் தடையை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். covid-19 தாக்கத்திற்கு உள்ளாகி உள்ள இந்த காலகட்டத்தில் பின்னடைவான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.






