நாளை தவெகவில் இணைவதாக சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமை மீது சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் பல எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கினர்.
பின்னர் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சில எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றனர். அதேசமயம், அந்த அணியில் இருந்த சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்தனர்.
இதற்கிடையில், அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து சி. விஜயபாஸ்கர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியை தெரிவித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்தும் வெளியேறினார்.
அதிமுகவில் இருந்து வெளியேறிய சி. விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அவர் கடந்த சில தினங்களாக அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை இணையவிருப்பதாக சி.விஜயபாஸ்கர் அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், “கடந்த 35 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது உலகையே உலுக்கிய ‘கோவிட்’ பெருந்தொற்று காலகட்டத்தில் முழு அர்ப்பணிப்போடு மக்களுக்காக நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.
நம் மண்ணுக்கும், மக்களின் நல்வாழ்வுக்குமான என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல் மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.





