கேப்டன் கோஹ்லி அதிரடி விளாசல்..! முதலாவது டி20 போட்டியில் மே.இ.தீவுகளை பந்தாடிய இந்தியா!!
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், கேப்டன் கோஹ்லியின் விளாசலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள மே.இ.தீவுகள் அணி 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.மே.இ.துவக்க வீரர் சிம்மன்ஸ் 2 ரன்களில் சகார் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அதிரடி காட்டிய லீவிஸ் 17 பந்தில் 40 ரன்கள் எடுத்திருந்த போது, வாஷிங்டன் சுந்தரிடம் வீழ்ந்தார். கிங் (37), ஹெட்மயர் (56), கேப்டன் போலார்டு (37),ஹோல்டர் (24) ஆகியோர் தங்கள் பங்குக்கு அதிரடி காட்டி கணிசமான ரன்களை சேர்க்க 20 ஓவர் முடிவில் மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிரடி துவக்க வீரர் ரோகித் சர்மா (8) ஏமாற்றினார். ஆனால் லோகேஷ் ராகுல் – கோஹ்லி ஜோடி அதிரடி ஆட்டம் ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். அரைசதம் கடந்த லோகேஷ் ராகுல் 62 ரன்களில் அவுட்டானார். டி20 போட்டிகளில் 6-வது சதம் கடந்த ராகுல்,29 போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். ராகுல் அவுட்டான பின், கோஹ்லி, சூறாவளியாக சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது இந்தியா.

கேப்டன் கோஹ்லி 50 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரியுடன் ஆட்டம் இழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். டி20 போட்டிகளில் கோஹ்லியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் டி20 போட்டிகளில் அதிக அரைசதம் (23) அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை (22 அரை சதம்) முந்தி முதலிடம் பிடித்தார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் கோஹ்லியே தட்டிச் சென்றார்.
மேலும் இந்தப் போட்டியில் 207 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்து வென்றதன் மூலம், இதுவே இந்திய அணியின் சிறந்த சேஸ் என்ற சாதனை படைத்தது. இதற்கு முன் 2009-ல் மொகாலியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 206 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடைபெறுகிறது.





