கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரசவங்கள் அதிகரிப்பு!
கொரொனா தாக்கத்திற்கு மத்தியில் கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரசவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரொனா காலகட்டத்தில் கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
சோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்கு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கப்படுகிறது. இவை தவிர பிரசவ செலவுகளும் அதிகம். ஏற்கனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த சமயத்தில் கைகொடுத்தது அரசு மருத்துவமனைகள் தான்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பிரசவம் நடந்துள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இங்கு ஆயிரத்து 745 பிரசவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,433 பிரசவங்களை நடைபெற்றன.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் மே மாதத்தில் மட்டும் 930 பிரசவங்கள் பதிவாகியுள்ளன.தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் லக்ஷயா சான்றிதழில் கோவை அரசு மருத்துவமனை பிளாட்டினம் தரவரிசை பெற்றுள்ளது. இங்கு 55% சுகப்பிரசவமும் 45% அறுவை சிகிச்சை மூலமும் பிரசவங்கள் நடைபெற்றுவருகின்றன.
எனவே நம்பிக்கையுடன் கர்ப்பிணிகள் இங்கு வருகை தருகின்றனர். இந்த இக்கட்டான சூழலிலும் உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.






