எந்தெந்த தொகுதிகளில் நாளை 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்..!
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.அசாம், பிகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதில், கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாஜகவின் மாநில தலைவர் கே. சுரேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.





