மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா..! தமிழகத்தில் மேலும் 5 செய்தியாளர்களுக்கு பாதிப்பு!!
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஒரே நாளில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 2 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 5 பேருக்கு உறுதியானதால் செய்தி மற்றும் ஊடகத்துறையினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
உலகை ஒட்டுமொத்தமாக கலங்கடித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று, மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கி வருகிறது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை மட்டுமின்றி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், கொரோனா நிலவரம் குறித்து களத்தில் பம்பரமாக சுழன்று செய்தி சேகரிக்கும் செய்தி மற்றும் ஊடகத்துறையினரையும் கதிகலங்க வைத்து வருகிறது.
சென்னையில் பத்திரிகையாளர் இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், நாடு முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் மேலும் 5 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மும்பையில் 173 பத்திரிகையாளர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 53 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பத்திரிகை மற்றும் டிவி செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் என மும்பையில் மட்டும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது, செய்தி ஊடகத்துறையினரை கலக்கமடையச் செய்துள்ளது. மேலும் இவர்களில் பெரும்பான்மையினருக்கு எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.







