தவறு என்றால் திமுக நெஞ்சுரத்துடன் தட்டிக்கேட்கும்..!
தவறு என்றால் திமுக நெஞ்சுரத்துடன் தட்டிக்கேட்கும் என்றும் பின்வாசல் வழியே வராமல் நேரடியாக சந்திக்கும் என்றும் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நெய்வேலியில் நடைபெற்றது.
திமுகவில் இணைந்தவர்களை கட்சி தலைவர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வரவேற்றார். அப்போது உரையாற்றிய அவர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டு தாம் தடுப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டாலின் திமுக என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம் என்று விளக்கம் அளித்தார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டறியாமல் அவரது நினைவிடத்தை திறந்துவைக்க எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது என்று ஸ்டாலின் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.






