காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார்..! தன்னை கடத்தவில்லை என பெண் கடிதம்!
கோவையில் காதல் மனைவியை கடத்தி சென்றதாக கணவர் புகார் அளித்துள்ள நிலையில் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த கார்த்திகேயன் திருச்சியை சேர்ந்த சக்தி தமிழினி பிரபா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று கார்த்திகேயன் மற்றும் அவரது தாயார் மீது தாக்குதல் நடத்தியதோடு பெண்ணை அடித்து இழுத்துச் சென்றனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் தன் மனைவியை பெற்றோர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கார்த்திகேயன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி சென்ற காவல்துறையினர் சக்தி தமிழினி பிரபாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெற்றோர் தன்னை கடத்தவில்லை என்றும் இரு வாரங்களில் பெற்றோரை சமாதானப்படுத்திவிட்டு கணவர் வீட்டுக்கு திரும்புவதாகவும் அவர் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் புதன்கிழமை பெற்றோருடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதாகவும் அவர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.






