--- --:--:-- --

பிறந்தது நம்பிக்கை!  திருப்பூர் எஸ்பி ஆக அபிஷேக் குப்தா நியமனம்.. சட்டம் ஒழுங்கை கையாளாத சாமிநாதன் மாற்றம்!

vgjfgjf

திருப்பூரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வரும் நிலையில், எஸ்பி ஆக இருந்த சாமிநாதனை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளதால், இனி சட்ட விரோதச் செயல்கள் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

 

ண்மையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், திருப்பூர் மாநகர் சட்டம் ஒழுங்கு தடுப்பு காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

திருப்பூர் மாவட்ட எஸ்பியாக கடந்த ஒரு வருடமாக பொறுப்பில் இருந்து வந்த சாமிநாதன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோயம்புத்தூர் போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த ராஜராஜன் திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

சாமிநாதன் மாற்றப்பட்டது ஏன்?

 

 

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் என்பது வழக்கமான நடவடிக்கை என்றபோதும், திருப்பூர் எஸ்பி ஆக இருந்த சாமிநாதனின் பணியிடமாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசபிரபு என்பவர், பல்லடம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்டார். மதுபான விற்பனை விதிமீறல் குறித்து அவர் செய்தி வெளியிட்டதால், இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

 

அதே நேரம், தனது உயிருக்கு மர்ம நபர்களால் அச்சுறுத்தல் உள்ளது என்று நேசபிரவு தெரிவித்திருந்தும் கூட, பல்லடம் காவல்துறை அலட்சியத்துடன் இந்த விவகாரத்தை கையாண்டது. இது தமிழக அளவில் திருப்பூர் காவல்துறைக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.

 

அதிர வைத்த ஆணவக் கொலை விவகாரம்!

 

இதுதவிர, திருப்பூரில் வசித்துவந்த திருப்பூர் பெண், ஆணவக்கொலை செய்யப்பட்டது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சூழ்நிலையில்தான் எஸ்பி சாமிநாதன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு அபிஷேக் குப்தா நியமனம் செய்யப்பட்டுளார்.

புதிய எஸ்பி அபிஷேக் குப்தாவை பொருத்தவரை, காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. காவல் அதிகாரி என்ற பந்தா இல்லாமல் இயல்பாக பழக்கூடியவர், இனிமையானவர், மக்களின் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்டு, உரிய தீர்வு வழங்கும்படி காவல்துறையினருக்கு அக்கறையோடு உத்தரவிடுபவர் என்றெல்லாம் பலரும் அவரை பாராட்டுகின்றனர்.

 

அதே நேரம், புதிய எஸ்பி அபிஷேக் குப்தாவுக்கு முன்புள்ள சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல. திருப்பூரின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. டாஸ்மாக் விதிமீறல், போதைப்பொருள் விற்பனை, மாமூலில் திளைக்கும் காவல்துறையினர், தொழிலாளர் என்ற போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் என்றெல்லாம் பிரச்சனைகளின் பட்டியல் நீளுகிறது.

 

சமூக விரோதிகள் நடமாட்டம்!

 

தொழில் நகரான திருப்பூருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல, வெளி மா நிலங்களில் இருந்தும், இன்னும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வந்து பணி புரிந்து வருகின்றனர். அதேபோல் வியாபார வர்த்தகம் தொடர்பாக வெளி நாட்டினவர்களும் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர்.

 

இது திருப்பூருக்கு பிளஸ் என்றால், இதுவே மைனஸ் ஆகவும் உள்ளது. ஏனென்றால், வெளி நகரங்கள், மாநிலங்களில் குற்றங்களை புரியும் குற்றவாளிகள், தொழிலாளர் என்ற போர்வையில் இங்கு எளிதாக தங்கிவிடுகின்றனர். எனவே, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, தொழில்துறையினர் பணியமர்த்துகின்றனரா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

 

போதைப்பொருட்களின் சொர்க்கம் திருப்பூர்!

 

திருப்பூர் என்றாலே மது, கஞ்சா என போதைப் பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளது. அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக உள்ளது. இதனால், மது தலைக்கேறி சமூக விரோதிகள் வழிப்பறி, கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், பெருமாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் வழிப்பறி, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு போன்றவை சகஜமாக உள்ளது. புதிய காவல் கண்காணிப்பாளர், ரவுடிகள் பட்டியலை கையில் எடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலை நாட்ட வேண்டும்.

 


பல்லடம், தனி ராஜ்ஜியம்!

திருப்பூர் மாவட்டத்திலேயே சமூக விரோதச் செயல்கள், காவல்துறை மாமூல், குவாரி முறைகேடு என்று எல்லாவற்றிலும் பல்லடம் முதன்மையாக உள்ளது. இங்குள்ள சட்ட விரோத குவாரி உரிமையாளர்களிடம் மாமூல் வாங்கிக் கொண்டு காவல்துறையினர், கனிமவள கொள்ளைக்கு துணை போவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

 

அதேபோல், பல்லடம் பகுதியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலும் பொதுஇடங்களில் உள்ளதாக பலரும் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் கடை உரிமையாளர்களை திமுகவினர் மிரட்டி பணம் வசூலிப்பது, தர மறுப்பவர்களை தாக்கி மிரட்டுவது என்று, கட்சியினரின் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாக கூறப்படும் நிலையில், காவல் கண்காணிப்பாளர் இந்த விஷயத்தில் கண்டிப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வர்த்தகர்கள், பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.

 

எனவே, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள, அபிஷே குப்தா முன்புள்ள பணிகள் சவாலானவை. அதே நேரம், திருப்பூர் மாவட்டத்தில் பணி புரிந்து நன்கு பரிச்சயமானவர் என்பதால், இங்குள்ள சட்டம் ஒழுங்கு, அரசியல் கள நிலவரம் அறிந்திருப்பார் என்பது அவருக்குள்ள சாதகமான விஷயம்.

 

இதை பயன்படுத்தி, மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கை எஸ்பி அபிஷேக் குப்தா நிலை நாட்டுவார் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புதிய எஸ்பி நிச்சயம் அதை சாதிப்பார் என்று நம்புவோம்!


 

Right Menu Icon