வெகுவிமரிசையாக நடைபெற்ற பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியிலுள்ள பழமைவாய்ந்த காமாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான காமாட்சியம்மன் சந்தானலட்சுமி திருக்கோவில் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதால் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர்.அதன்படி கோவிலில் திருப்பணிகள் செய்து கோவில் கோபுரங்களுக்கு வண்ணங்கள் தீட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.பேரூராதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித கலசங்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர்,வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.





