குமரியில் இடி மின்னலுடன் பெய்த கனமழை
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல கோதையார், குற்றியாறு, மோதிரமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும் நீண்ட நேரம் கனமழை நீடித்தது.
முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணியில் அணையில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு மணி நேரம் இடைவிடாது பெய்த மழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
தாழ்வான பகுதியான ஆத்து கடைத்தெரு, நந்தவனப்பட்டி தெரு, ஓட்டமடம் தெரு உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியுற்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் தினேஷ்குமார் ஜேசிபி எந்திரம் மூலம் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.






