சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை..!
சென்னை பகுதிகளில் அதிகாலை முதலே இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னையில் அதிகாலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், துரைசாமி சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் மழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் நுங்கம்பாக்கம் சுரங்கப் பாதையில் தண்ணீர் சூழ்ந்தது. இதன் காரணமாக சுரங்கப் பாதையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இதேபோன்று தியாகராய நகரில் உள்ள துரைசாமி சுரங்கப் பாதையிலும் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர், ஆவடி, புழல் உள்ளிட்ட இடங்களிலும் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
இதேபோல், ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கருங்கல்பாளையம், மூலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 27 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று காலை 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 22 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.





