--- --:--:-- --

இன்று தமிழகம் வரும் அமித்ஷா! சொந்த மண்ணில் கெத்து காட்டும் நயினார்.. திருப்பம் தருமா நெல்லை பூத் கமிட்டி மாநாடு?

1

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருநெல்வேலியில் இன்று பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. அண்ணாமலைக்கு பிறகு, தமிழக பாஜக இன்னும் வளர்ந்துள்ளது என்பதை நிரூபிக்க, சொந்த மண்ணியில் பலத்தை காட்ட நயினார் நாகேந்திரனும் ஆயத்தமாகி வருகிறார்.

 

 

2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களை ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. அந்த வகையில் 3ஆவது பெரிய கட்சியான தமிழக பாரதிய ஜனதா கட்சியும், சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

 

தேர்தலை பாஜக- அதிமுக கூட்டணி அமைத்து களம் காண உள்ளன. பாஜக அணியில் அதிமுக சேர வேண்டுமென்றால், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்த அண்ணாமலையை, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நிபந்தனை போட்டார். அதன்படி அண்ணாமலை நீக்கப்பட்டு, பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டர்.

 

ஆனால், அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் வந்தபின், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பதாக தொண்டர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பலரும் அண்ணாமலை இல்லாததால் பாஜகவின் செயல்பாடுகளில் முன்புபோல் சுறுசுறுப்பு இல்லை; நயினார் தலைமையில் பாஜக செயல்பாடு திருப்தி இல்லை. அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால், தமிழக பாஜகவை அதிமுகவிடம் அடகு வைத்துவிட்டார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 

இந்த குற்றச்சாட்டுகளை தனது செயல்பாடுகளை மறுக்க வேண்டிய நிர்பந்தம் நயினார் நாகேந்திரனுக்கு உள்ளது. எனவே, தனது சொந்த மண்ணான நெல்லையில் பூத் கமிட்டி மாநாடு நடத்தி, கட்சியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டிய முடிவு செய்தார். அதன்படி, பூத் கமிட்டி மாநாட்டையை பிரம்மாண்ட திருவிழா போல் நயினார் ஏற்பாடு செய்துள்ளார்.

 

அதன்படி, இன்று பாஜகவின் குமரி மண்டலத்தைச் சேர்ந்த பிரம்மாண்டமான பூத் கமிட்டி மாநாடு, நெல்லையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆரம்பத்தில் இந்த மாநாடு ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால், தமிழக பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனும் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானதை அடுத்து, பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி ஆக. 19இல் நடைபெற இருந்த பூத் முகவர்கள் மாநாடும் ஒத்திவைக்கப்பட்டு இன்று 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

 

நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் நெல்லை பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்கிறார். இதில், தென் மாவட்டங்களில் நெல்லை உள்பட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட, 28 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, 8,595 பூத் கமிட்டிகளைச் சேர்ந்த, சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த மாநாட்டில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக அணி வெற்றிக்கு எப்படி செயல்பட வேண்டும்? ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில், திமுக அரசின் துஷ்பிரயோகத்தை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும்? திமுக கூட்டணியினரின் வெற்றியை தடுத்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகளை கவருவது எப்படி? என்றெலாம் வழிமுறைகள் விளக்கித் தரப்பட உள்ளன.

 

மேலும், பிரதமர் நரேந்திர மோடியில் மக்கள் நலத் திட்டங்கள், தமிழகத்துக்கு மத்திய அரசு செய்துள்ள எண்ணற்ற நிதி உதவிகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் வீடுவீடாக மக்களிடம் பாஜக பூத் முகவர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என, இதில் அறிவுறுத்தப்பட உள்ளது. இதுதவிர, திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட வரிகள், நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பயிர்சிகள், பூத் முகவர்கள் மாநாட்டில் தரப்பட உள்ளது.

 

நயினார் தலைமையில் நடைபெற உள்ள பூத் கமிட்டி ஆளும் திமுகவுக்கு எரிச்சலூட்டும் நிலையில், நெல்லை ஊக்கம்பட்டி பூத் கமிட்டி மாநாட்டிற்கு காவல்துறை மூலமாக மறைமுகமாக இடையூறுகள் ஏற்படுத்துவதாக பாஜகவினர் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ஆனால், பாஜக பூத் கமிட்டி மாநாடு வெற்றியடையும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “திமுக தேர்தலின்போது அளித்த 285 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எஞ்சிய வாக்குறுதிகளிலும் உறுதி மட்டுமே அளித்திருக்கிறார்கள். அதை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அந்த வகையில் பயிற்சி தரப்போகிறோம். திருநெல்வேலியில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாடு அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தும். இப்போதைய பாஜக பழைய பாஜக அல்ல, புதிய பாஜக” என்றார்.

 

நாளைய மாநாட்டிற்கு நெல்லை வரும் அமித் ஷாவுக்கு தனது இல்லத்தில் தேநீர் விருந்தளிக்கிறார் நயினார் நாகேந்திரன். இதில் அண்ணாமலை, தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் பாஜக டெல்லி மேலிடத்திடம் தனக்கு உள்ள செல்வாக்கை நயினார் நாகேந்திரன் நிரூபிக்க திட்டமிட்டுள்ளார்.

 

எனவே, அமித்ஷாவின் திருநெல்வேலி பூத் கமிட்டி மாநாட்டு வருகை, தமிழக பாஜக தொண்டர்களில் மிகப்பெரிய எழுச்சியும் உற்சாகத்தையும் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நயினார் நாகேந்திரன் நம்புகிறார்.

 

இதன் மூலம் அண்ணாமலை இல்லையென்றாலும் தமிழகத்தில் என்னால் பாஜவை வளர்க்க முடியும் என்பதை நிரூபிக்க, நெல்லை சீமையை பயன்படுத்திக் கொள்ள நயினார் திட்டமிட்டுள்ளார். அவரது திட்டம் பலிக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Right Menu Icon