ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் திடீர் ராஜினாமா..!
ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவருடன் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவ்தாலா மற்றும் ஒட்டுமொத்த அமைச்சர்களும் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஹரியானாவில் கூட்டணியில் உள்ள ஜே ஜேபி கட்சிக்கும் -பாஜகவுக்கும் இடையே மக்களவை சீட் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. கடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 40 இடங்களிலும், சுயேச்சைகள் 7 பேர் மற்றும் ஜேஜேபி கட்சியின் 10 எம்எல்ஏகளுடன் சேர்ந்து கூட்டணி வைத்து,. பாஜக ஆட்சி அமைத்து இருந்தது.
அந்த மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜேஜபி ஆதரவை துறந்துள்ள பாஜக, சுயேச்சைகளுடன் கைகோர்த்து மீண்டும் ஆட்சியமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவும்-ஜேஜேபி கட்சியும் அடுத்தகட்ட நகர்வு குறித்தும், தனித்தனியே தங்கள் எம்எல்ஏக்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர். பாஜக தலைமையிலான ஆட்சி கலைந்துவிட்ட நிலையில்,புதிய சட்டமன்றக் குழுதலைவரை தேர்வு செய்யும் முக்கிய கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இன்று மாலையே பாஜக தலைமையில் புதிய ஆட்சி பதவி ஏற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வசம் 31 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜேஜேபி கட்சி எம்எல்ஏகள் 10 பேர் காங்கிரஸ் பக்கம் தாவினாலும் பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். எனவே ஹரியானா மாநில அரசை தீர்மானிப்பதில் சுயேச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் சட்டமன்றத்தில் ஆட்டம் கண்டுள்ளதால் அந்த மாநில அரசியல் களம் ஆட்டம் கண்டுள்ளது.





