அனிதா குப்புசாமி காலில் விழச்சொல்லி துன்புறுத்தியதாக சிறுமிகள் புகார்..!
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தெருவிலுள்ள புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் ஒருபகுதியில் விகா என்ற பெயரில் ஆர்கானிக் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்தால் தனியாக 300 ரூபாய் கையில் கொடுத்து விடுவோம் என கூறியதாக சொல்லப்படுகிறது.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற சகோதரிகளுக்கு மேலாளர் 200 ரூபாய் மட்டும் கொடுத்ததாகவும் அதனை தட்டிக் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகோதரிகள் இருவரையும் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே செல்லும்படி கூறி வீட்டில் அடைத்து வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
பிரச்சினையைத் தொடர்ந்து அங்கு வந்த சகோதரிகளை தகாத வார்த்தைகளால் பேசியதோடு அனிதா குப்புசாமி அவர்களை தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சகோதரிகள் இருவரையும் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்ததை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்களது குற்றச்சாட்டுக்களை மறுக்கும் மேலாளர் சிறுமிகளும் தங்களிடம் தகராறு செய்ததாகவும் அதற்கான சிசிடிவி ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும் அதனை போலீசில் ஒப்படைப்பேன் என்று கூறியுள்ளார்.






