சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று தளர்வுகள் இல்லாத கடும் ஊரடங்கு… தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள்!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி இன்று கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னை நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் விசுவரூபம் எடுத்து நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த நிலையில் நேற்றைய பாதிப்பு முதல் முறையாக 15 ஆயிரத்தை கடந்து 15,915 என பதிவாகி உள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்தை தாண்டி 4, 11,727 ஆக உயர்ந்துள்ளது.நேற்று பலி எண்ணிக்கையும் 307 ஆன நிலையில் மொத்த உயிரிழப்பும் 14,721 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 2396 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 56,845 ஆகவும் பலி எண்ணிக்கை 704 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் ஏற்கனவே உள்ள ஊரடங்குக்குள் முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 18-ந் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 30-ந் தேதி வரை 12 நாட்களுக்கு விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் நாளை காலை 6 மணி வரை பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனைகள் தவிர்த்து அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சென்னை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களிலும் சாலைகளில் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அடுத்து வரும் 28-ந் தேதி ஞாயிறன்றும் இதே போன்ற தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இந்த 4 மாவட்டங்களிலும் கடைப்பிபிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தமிழகத்தில் மதுரை, நாகை, மயிலாடுதுறை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இன்று கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறைச்சி, மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை போன்ற பிற பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் நுழைவோரை கண்டறிந்து தடுக்கும் பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.






