கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழப்பு..!
தெலுங்கானாவில் கருத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 25ஆம் தேதி பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கருத்தடை அறுவை சிகிச்சை முகாமில் 34 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் நான்கு பேர் நேற்று முன்தினம் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறந்த பெண்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வீடும் வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் குழந்தையின் படிப்பு செலவையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





