திருப்பூரில், உள்நாட்டு பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!
திருப்பூரில், உள்நாட்டு பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து.. பல கோடி மதிப்பிலான பனியன் பொருட்கள் சேதம்..5 மணி நேரம் போராடி தீயை அணைத்த வீரர்கள் ..!
திருப்பூர், நொய்யல் ஆறு ரோடு, மணியக்காரன்பாளையம், காஞ்சிபுரம் நல்லூர் பகுதியில் எல்சிங்கோ என்னும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக தரை தளம், முதல் மாடி என 20 ஆயிரம் சதுர அடியில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

இளங்கோ, பாலு மற்றும் இரண்டு பெண் பங்குதாரர்களை கொண்ட இந்த கம்பெனியானது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஆன்லைன் மூலம் வர்த்தகம் நடத்தி வந்தது. இன்று காலை 8 மணி அளவில் வழக்கம் போல் கம்பெனி திறக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர்களும் கம்பெனிக்குள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கம்பெனியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. உடனே கம்பெனியை திறந்து பார்த்தபோது கம்பெனிக்குள் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.. உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் கம்பெனிக்குள் எரிந்து கொண்டிருந்த தீயானது மலமலவென்று மற்ற பகுதிக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனால் அக்கம்பெனிக்கு மேல் பகுதியில் கரும்புகை வானில் பரவத் தொடங்கியது. உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கம்பெனிக்குள் பல பகுதிகளில் பரவி தீ பிடிக்க தொடங்கியது.
இதனால் அந்த பகுதியில் கரும்புகையும், தீப்பிழம்புகள் கொழுந்து விட்டு எரிவதை பார்த்த பொதுமக்கள் அங்கு வரத்தொடங்கினர். உடனே போலீசார் பொதுமக்களை தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை யின்திருப்பூர் மாவட்டஅலுவலர் அண்ணாதுரை தலைமையில் துணை மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர்கள் இளஞ்செழியன், வீரராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சுரேஷ்குமார் (ஊத்துக்குளி ), மோகன் (திருப்பூர் தெற்கு), நவீந்திரன்(அவிநாசி ),ஆகியோர் கொண்ட குழுவினர் சிறிய தீயணைப்பு வண்டி உள்பட 6 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 55 தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க தொடங்கினர்.

குறுகலான இடமாக இருந்ததால் தண்ணீர் லாரிகள் மூலம் சம்பவ இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. முதலில் கம்பெனிக்குள் தீயை அணைக்க செல்ல முடியாததால் கம்பெனியின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதியை உடைத்து தீயணைப்பு வரை உள்ளே சென்றனர். பின்னர் ஹைட்ராலிக் லேடர் என்னும் தூக்கு வண்டிகள் மூலம் வீரர்கள் ஏறி சென்று கம்பெனியின் மேல் பகுதியில் இருந்து தீயை அணைக்க முற்பட்டனர்.

அப்பொழுது கம்பெனியின் மேல் கூரை அப்படியே சரிந்து கீழ் தளத்தில் விழுந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த தையல் மிஷின்கள், டேபிள், சேர்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீப்பிடித்து முற்றிலும் உருகி உருத்தெரியாமல் ஒட்டிக் கிடந்தன.

மேலும் பனியன் துணிகள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகளும் எரிந்து சாம்பல் ஆயின. இதில் கம்பெனிக்கு முன்பு இருந்த ஜெனரேட்டர் செட்டும் கருகி கிடந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பொக்கலின் வண்டிகளை கம்பெனிக்குள் கொண்டுசென்று அந்த எரிந்த துணிகளையும், பொருட்களையும் வெளியே கொண்டு வந்தனர்.அப்போது சில இடங்களில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ விபத்தில் அந்த கம்பெனியின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டன. கம்பெனியை சுற்றிலும் போடப்பட்டு இருந்த அலுமினிய தகடுகள் உருகி கிடந்தன. இதனால் மீண்டும் அந்த கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல கோடி மதிப்புள்ள துணிகள், எந்திரங்கள், கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





