மு.க. ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : வாபஸ் பெற்ற மனுதாரர்
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்கு ரூ. 2.27 கோடிக்கு நிலம் வாங்கியதை மறைத்துள்ளதாக கூறி, விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் இதுசம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில், வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்துக்கள் ஆகாது. தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து சிவஞானசம்பந்தம், தான் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.




