வெளியே செல்லாம இருக்க லீவு விட்டா…கூட்ட கூட்டமா விளையாடுரானுக!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவத் தொடங்கிவிட்டது. இதனால் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் விடுமுறை விடப்பட்டதால் சிறுவர்கள் இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
பல உலக நாடுகளில் நடக்கவிருந்த சர்வதேச விளையாட்டு போட்டிகள் முதல் உள்ளூர் விளையாட்டுகள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. சென்னை தியாகராய நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு திடலில் கும்பலாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.
பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என பலரும் கொரொனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாமல் விளையாடி வருகின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது. பூட்டி எச்சரிக்கை அறிவிப்பையும் ஒட்டியுள்ளனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட அடுத்த இரண்டு வாரங்களும் முக்கியமானவை. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்தால் தான் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையில் பள்ளி சிறுவர்களும் இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அரசின் பல்வேறு துறைகள் இணைந்து கொரோனோ பரவாமல் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் சுயகட்டுப்பாடு ஒத்துழைப்பு இல்லாமல் இதனை எதிர்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டுகின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.






