டிஎன்பிஎஸ்சி முறைகேடு! அதிர வைக்கும் வாக்குமூலம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை தொடர்கிறது. அதில் 2019ஆம் ஆண்டு மட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்விலும் அவர்கள் முறைகேட்டில் ஈடுபட முயன்றது தெரியவந்துள்ளது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து விசாரிக்க விசாரிக்க அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 குரூப் 2 ஏ மற்றும் விஏஓ தேர்வுகளில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரும், டிஎன்பிஎஸ்சி ஊழியரும் ஓம்காந்தன் ஆகியோர் சிபிசிஐடி காவலில் உள்ளனர். அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் தான் மீண்டும் காவல்துறையினரை அதிர செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்ய முயன்றதாக ஜெயக்குமாரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் கூறுகின்றனர். முறைகேட்டில் ஈடுபடுவதற்காக 40க்கும் அதிகமானோர் இடம் இருந்து தலா 7 லட்சத்திலிருந்து 9 லட்சம் ரூபாய் வரை வாங்கியதும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு விடைத்தாள்களை எடுத்து செல்லும்போது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அதிக கவனத்துடன் கண்காணித்ததாலும், அவர்களை விலைக்கு வாங்க முடியாததால் தங்கள் முயற்சி தோல்வி அடைந்ததாக ஜெயக்குமாரும், ஓம் காந்தனும் கூறியுள்ளனர்.
முறைகேடு செய்ய இயலாததால் பணம் வாங்கி அவர்களிடம் அந்த தொகையை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையில் இருந்து தூரத்தில் உள்ள தேர்வு மையங்களில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் என கருதியதாகவும் அதனாலேயே தங்கள் முறைகேட்டுக்கு ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.





