திமுகவிலும் சலசலப்பு! அன்னூர், பல்லடத்தில் போராட்டத்தில் குதித்த திமுகவினர்!!
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி மற்றும் பல்லடம் தொகுதிகளை கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கியதை கண்டித்து, திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக அணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 6 ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. அதன்படி பல்லடம், மதுரை (தெற்கு), மதுராந்தகம், அரியலூர், சாத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 6 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது.
அதேபோல், இதுதவிர திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் அவிநாசி சட்டமன்ற தொகுதியினை ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமானுக்கு ஒதுக்கியது, திமுகவினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைமையின் முடிவை கண்டித்து அன்னூரில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி தொகுதியினை திமுகவிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல், பல்லடத்திலும் திமுகவினர் நேற்றிரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் தொகுதியானது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எளிதாக இருந்த சூழலில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதாலும், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ளதாலும், வெற்றி வாய்ப்பு பறிபோய்விடுமோ என்று திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித சந்தேகம் உள்ளது.





