--- --:--:-- --

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவினார் நடிகர் செந்தில்!

Actor senthil

சினிமா காமெடி நடிகர் செந்தில், அதிமுகவில் இருந்து விலகி, அதன் கூட்டணி கட்சியான பாஜகவில் இன்று இணைந்தார். பாஜக ஊழலற்ற ஆட்சியை செய்து வருவதாக புகழ்ந்துள்ளார்.

 

தமிழக பாஜகவின் பல்வேறு பிரபலங்களை வளைத்து தங்கள் கட்சியின் இணைத்து வருகின்றனர். குறிப்பாக, திரைப்பட நடிகர் – நடிகைகளை மோப்பம் பிடித்து, பாஜகவில் சேர்த்துவிடுகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, பாஜகவில் இணைந்தார். திமுக- அதிமுக என்று மாறி மாறிச் சென்று வந்த திராவிட சிந்தாந்தம் கொண்டிருந்த நடிகர் ராதாரவி, காவிக் கட்சியான பாஜகவில் ஐக்கியமானார்.

 

அந்த வரிசையில் நடிகை கவுதமி, நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் அனுமோகன், காமெடி நாடக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் சிவாஜி மகன் ராம்குமார், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், தினா என்று திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியல் நீள்கிறது.

 

இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர், நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் செந்தில் செய்த காமெடி அலம்பறைகளை யாராலும் மறக்க முடியாது. ஆனால், அரசியல் சேர்ந்த பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் மங்கின. அதிமுகவில் பல ஆண்டுகளாக இருந்த செந்தில், தேர்தல் காலங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்.

 

இந்த நிலையில், திடீரென்று அதிமுகவில் இருந்து விலகி அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் செந்தில் கூறுகையில், அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தேன். அதிமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால் கொஞ்சகாலம் ஒதுங்கி கொண்டேன்.

 

பாரதிய ஜனதா கட்சி, நல்ல கட்சி. ஊழலற்ற ஆட்சியை செய்து வருகிறது. கண்டிப்பாக பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியும். பாஜகவுக்கு ஆதரவாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் பிரச்சாரம் செய்வேன். அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வது குறித்து பாஜக தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். கட்சித் தலைமை உத்தரவிட்டால், பிரச்சாரம் செய்வேன் என்று செந்தில் கூறினார்.

 

நடிகர் செந்திலை தொடந்து, ஆக்‌ஷன் கிங் எனப்படும் நடிகர் அர்ஜூன், விரைவில் பாஜகவில் இணைவார் என்று தகவல் கசிந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon