திமுகவில் யார் யாருக்கு சீட்? இன்று வெளியாகிறது வேட்பாளர் பட்டியல்!
சட்டசபை தேர்தலில் களம் காணப்போகும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று பகல் வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல், வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்க 2 தினங்களே உள்ளன. எனவே, அதிமுக – திமுக கூட்டணி கட்சிகள், தொகுதிப் பங்கீடு, போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் கண்டு, வேட்பாளர் பட்டியலை அறிவிக்க ஆயத்தமாகிவிட்டன.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ்க்கு 25 தொகுதிகள், மதிமுக, மார்க்சிஸ்ட, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3, மனித நேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
அதன்படி, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், கூட்டணி வேட்பாளர்கள் 13 பேர் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்குவார்கள். அவ்வகையில், திமுக மற்று கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மொத்தம் 187 பேர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
தொகுதிப் பங்கீடு முடிந்ததை அடுத்து, திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் பேச்சு நடத்தி வந்தனர். இதன் முடிவில், அனைத்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக முடித்துள்ளது.
எனவே, சட்டசபை தேர்தலில் களம் காணப்போகும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று பகல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியலை இன்று பகல் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து, மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.





