--- --:--:-- --

சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் 464 ஆண்டு பழமையான 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு..!

21

சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் 464 ஆண்டு பழமையான 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடியைச் சேர்ந்த புலவர் கா.காளிராசா கண்டுபிடித்துள்ளார்.

 

 

சக்கந்தியில் அரண்மனை சசிவர்ணம் அவரது தம்பி மலைராஜ் மற்றும் இராமநாதபுரம் மாரி ஆகியோர் சாய்ந்து மண் மூடிக்கிடந்த கல் ஒன்றில் எழுத்து இருப்பதைக்கண்டு அதை நட்டுவைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்,அதன் பேரில் அங்கு கள ஆய்வு செய்த போது 464 ஆண்டு பழமையான 16 ஆம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது.

 

 

திருவாழிக்கல் – பெருமாளுக்கு இறையிலியாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக்குறிக்க எல்லைக்கல்லாகவும் தானம் கொடுத்த செய்தியைச்சொல்லும் கல்லிலும் திருவாழிச் சின்னம் பொறிக்கப்பெறும், இக்கல்லில் நான்கு பக்கங்களிலும் திருவாழிச்சின்னம் புடைப்பாக வடிக்கப் பெற்றுள்ளது.

 

கல்வெட்டு – ஸ்வஸ்திஸ்ரீ எனும் மங்கலச் சொல்லோடு தொடங்கி இருபத்திரண்டு வரிகள் இடம் பெற்றுள்ளன,எழுத்து பிழைகள் உள்ளன, ஆறாவது வரியில் வி என்ற முதலெழுத்தைத் தவிர பின் வரும் மூன்றெழுத்துகள் சிதைந்துள்ளன, எட்டாம் வரியில் கடைசி இரண்டெழுத்துகள் சிதைந்துள்ளன, ஒன்பதாம் வரியில் முதல் எழுத்தும் கடைசி இரண்டெழுத்துகளும் சிதைந்துள்ளன, திருவிடையாட்டம் என்ற சொல்லோடு முடிகிறது.

கல்வெட்டுச்செய்தி – ஸ்வஸ்திஸ்ரீ நள வருடம் தை மாதம் 30 ஆம் நாள் சுவாமி அழகருக்கு மகாராசா விசுவன நாயக்க திம்மப்ப நாயக்கர் அழகருக்கு வண்டியூர் திருநாள் பொலியிட்டுக் கொடுத்த இக்கிழக்கு வலசை சக்கை கரிசம்பூர் ஏந்தல்களும் அழகர் திருவிடையாட்டம் என முடிகிறது, சிதைந்துள்ள எழுத்துகளை உடைய வரிகள் கிருஷ்ண தேவராயர் விசுவநாத நாயக்கரின் புகழ்பாடக்கூடிய மெய்கீர்த்திச் சொல்லாக இருக்கலாம், கிழக்கு வலசை சக்கை என்றுகுறிப்பிட்டு சொல்லப்படுவதால் கிழக்கு வலசை சக்கை இன்றைய சக்கந்தியையும் மேற்கு வலசை சக்கை இன்றைய கோமாளிபட்டியையும் குறித்து இருக்கலாம், கரிசம்பூர் என்பது தற்போது கரிசம்புலி என வழங்கப் படுகிறது. மதுரை வண்டியூரில் கோவில் கொண்டுள்ள வீர அழகருக்கு இந்நிலப்பகுதி தானமாக வழங்கப் பெற்ற செய்தியை இக்கல்வெட்டு கூறுவதாகக் கொள்ளலாம்.

 

விசுவநாத நாயக்கர் – மதுரையில் விஜய நகரப் பேரரசு ஆட்சிக்குப் பிறகு 1529 ல் விசுவநாத நாயக்கர் நாயக்கர் ஆட்சியை தோற்றுவித்தார் இது 1736 வரை நீடித்தது, இவரது ஆட்சிக்காலம் 1529 முதல் 1564 வரை என்பர். இவரே மதுரையைச்சுற்றியுள்ள பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி செலுத்தியவர் ஆவார், இக்கல்வெட்டில் வரும் தமிழ் வருடம் நள ஆண்டு பொது ஆண்டில் 1556 இவரது ஆட்சிக்காலத்தில் பொருந்தி வருவதால் இக்கல்வெட்டில் குறிக்கப்பெறும் விசுவநாத நாயக்கர் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கரையே குறிப்பதாகக் கொள்ளலாம்.

 

திம்மப்ப நாயக்கர் – கிருஷ்ணதேவராயரிடம் விசுவ நாதநாயக்கரும் திம்மப்ப நாயக்கரும் நெருங்கிய அதிகாரிகளாக இருந்தனர்,திம்மப்ப நாயக்கர் வடாற்காட்டின் அமரநாயக்கராகவும் இருந்தார்,தஞ்சையில் நாயக்கராட்சியை தோற்றுவித்த சேவப்ப நாயக்கரின் தந்தையும் இவரே ஆவார்.இக்கல் வெட்டில் குறிக்கப் பெறும் திம்மப்ப நாயக்கர் இவராகவோ அல்லது அதே பெயரில் இப்பகுதியில் அரசப் பிரதிநிதியாக இருந்தவராகவோ இருக்கலாம்.

 

சக்கந்திப்பாளையம் – நாயக்கர் காலத்தில் சக்கந்தி 72 பாளையங்களில் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது, நாயக்கரின் தெய்வமான ஜக்கம்மா சக்கம்மா பெயரிலேயே சக்கை சக்கந்திப்பாளையம் வழங்கப்பட்டிருக்கலாம். வீரமங்கை வேலுநாச்சியாரின் தாயார் முத்தாத்தாள் பிறந்ததும் வேலு நாச்சியாருக்குப் பிறகு சிவகங்கை சீமைக்கு ஆட்சிக்கு வந்த வேங்கை பெரிய உடையாத் தேவரும் சக்கந்தியைச் சேர்ந்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வூரை அடுத்த செங்குளம் குளத்தினுள் 3500 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான எச்சங்கள் காணப்படுகின்றன.

 

அழிந்து போன சிவன் கோவில் – இவ்வூரில்பிற்காலப் பாண்டியர்களின் சிவன் கோவில் ஒன்று இருந்து அழிந்து போயிருக்கலாம் அதற்கான எச்சங்கள் காணக்கிடைக்கின்றன,சக்கந்தி கண்மாய் கரையில் நந்தி சிலையொன்று கேட்பாரற்றுக்கிடக்கிறது, மேலும் சக்கந்தி ஊரினுள் அரண்மனை என்று அழைக்கப்படுகிற இடதின் எதிரே உள்ள பொட்டலில் கோவில் இடிபாட்டில் மிச்சப்பட்ட முப்பட்டைக் குமுதகத் துண்டுக் கல்வெட்டு வரிகளில் செழியத்தரைய மற்றும் இன்னாயினாருக்கு என வருகிறது, செழியத்தரைய என்பது பாண்டியர் கால அரசு அலுவலரைக்குறிப்பதாகவும் இன்னாயினாருக்கு என்பது கடவுள் பெயரைக் குறிப்பதாகவும் இக்கல்வெட்டு இறையிலி தானம் வழங்கிய செய்தியைச் சொல்வதாகக் கொள்ளலாம் , எழுத்தமைதி பதிமூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். இப்பகுதியில் சிவன் கோவில் இருந்து அழிந்ததாக செவிவழிச் செய்திகளும் வழங்கப் படுகின்றன.
சிவகங்கைப் பகுதியில் நாயக்கர் கால கல்வெட்டு கிடைத்திருப்பது மக்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon