--- --:--:-- --

மக்களைப்பற்றி கவலைப்படுவது திமுக மட்டும்தான்: மு.க.ஸ்டாலின்

stalin 05

பதவி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொதுமக்களை பற்றி கவலைப்படும் கட்சி திமுக மட்டும்தான் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதிமுக – திமுக தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் காந்திராஜன், நத்தம் தொகுதியில் ஆண்டி அம்பலம் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், இன்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

 

திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை அப்படியே அதிமுக காப்பி அடிக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அதிமுக பொய்யான வாக்குறுதி அளித்துள்ளது. ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் மக்களை சந்தித்த ஒரே இயக்கம் திமுக தான்; மக்களை பற்றி கவலைப்படும் ஒரே கட்சி திமுக தான்.

 

கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை பதவியேற்ற மேடையிலேயே நிறைவேற்றினார். திமுக கொடுத்த இலவச டிவி எல்லா வீடுகளிலும் உள்ளது. ஆனால் அதிமுக கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, பேன்கள் எல்லாம் காயலாம் கடையில் தான் இருக்கிறது.

 

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தருவதாக கூறி திமுக ஏமாற்றிவிட்டதாக முதல்வர் பழனிசாமி பொய் சொல்கிறார். நாங்கள் ஏழைகளுக்கு நிலம் கொடுத்தோம் என நான் நிரூபிக்க தயார். கொடுக்கவில்லை என நிரூபிக்க முதல்வர் தயாரா? என சவால் விடுகிறேன். 2006ம் ஆண்டு 1,89,719 ஏக்கர் நிலத்தை 1,50,159 பேருக்கு திமுக ஆட்சி வழங்கியது.

 

கடந்த 2016 தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் பலவற்றை அதிமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என கடந்த லோக்சபா தேர்தலில் கூட சொன்னார்கள். ஆனால், ரத்து செய்யாமல் ஏமாற்றி, திமுக தான் நீட் கொண்டுவந்தது என அபாண்டமாக பொய் கூறுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon