எஞ்சிய 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவிக்கப்படாமல் இருந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரை பாஜக அறிவித்துள்ளது.
வரும் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
எனினும், தளி, விளவங்கோடு, உதகை ஆகிய மூன்று தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்று பாஜகவினர் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்நிலையில் பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது. அதன்படி, தளி தொகுதியில் நாகேஷ்குமார், விளவங்கோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியை எதிர்த்து ஜெயசீலன் களமிறக்கப்பட்டுள்ளார். உதகமண்டலம் தொகுதியில் போஜராஜன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான 17 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியளை பாஜக ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிட்டது. தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.





