--- --:--:-- --

தவெகவில் இணைய நினைத்தேனா..? – டிடிவி தினகரன்

3

ந்தர்ப்ப சூழ்நிலையால் டிடிவி தினகரன் கூட்டணிக்கு வரவில்லை என்று செங்கோட்டையன் கருத்துக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தவெக கூட்டணிக்கு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் நினைத்ததாகவும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார் என தெரிவித்தார்.

 

மேலும் தவெக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்கு, தான் ஏதாவது பதில் கூறினால், உடனே டெல்லியில் இருந்து வந்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது செங்கோட்டையன் கருத்து குறித்து அவர் பதில் அளித்தார்.

 

அப்போது, 1986-87 ஆண்டுகளிலிருந்தே நாங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம். நான் தமிழக வெற்றிக் கழகத்தில் கூட்டணிக்கு வர வேண்டும் என விரும்பினார், ஆனால் மறுக்க முடியாமல் தயக்கமாக இருந்தேன். நான் கூட்டணிக்கு வருவேன் என்று அவர் நம்பினார், நானும் அதனை மறுக்கவில்லை. ஆனால் நான் தவெகவில் இணையவில்லை என்பதற்கு சூழ்நிலை காரணமல்ல. அரசியல் சதி நிறைந்த துறை.

 

ஆட்சி அமையும் போது நல்ல உறவுகள் வேண்டும் என்பதற்காக நான் போட்டியிடவில்லை. அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக அதிமுக நண்பர்கள் அழைத்தனர். எடப்பாடி பழனிசாமி அமமுக கூட்டணியில் வர வேண்டும் என விரும்பினார். நான் அதிமுக சென்றதே அக்கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே. ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன் நான். செங்கோட்டையன் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுப்பதற்கு தர்ம சங்கடப்பட்டு, பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

 

வைத்தியலிங்கம் திமுகவுக்கு சென்றது வருத்தமளிக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றோடு ஒன்று இருந்தோம். அவருடைய சூழ்நிலையால் திமுகவுக்கு சென்றுவிட்டார். நான் அதிமுக கூட்டணியில் செல்ல மாட்டேன் என வைத்தியலிங்கம் நினைத்தார். நான் எப்படி திமுகவுக்கு செல்ல முடியும்? பிரிந்து கிடந்த அதிமுக ஒன்று சேர்ந்தால் வெற்றி பெற முடியும் என மக்களே சொல்வார்கள். எங்கள் கட்சியினர் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது என் விருப்பம்.

 

அதற்காக கூட்டணியில் அமைச்சரவை வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை. நியாயமான கோரிக்கைகளை மட்டுமே வைப்போம். என்னுடைய முதல் தெரிவு NDA தான் என ஏற்கனவே சொல்லியுள்ளேன். நான் தான் அதிமுகவினரிடம் சண்டையிட்டேன்.

 

அதிமுகவை ஊழல் கட்சி என்று விஜய் சொல்கிறார். 2021 வரை அதிமுகவில் இருந்த போது செங்கோட்டையன் அமைச்சராக இருந்தார். அவர் இப்போது தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளார். அதிமுக ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்த்து கொண்டுள்ளார். சசிகலா நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

Right Menu Icon