--- --:--:-- --

விஜயின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாகுமா?

2

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்தது. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை.

 

அதற்கு காரணம் சென்சார் பிரச்சினை. பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்த ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்த தணிக்கை வாரியம், சென்சார் வழங்க மறுத்து மறு ஆய்வு செய்ய பரிந்துரை அளித்தது. இதை எதிர்த்து, அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம், தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது.

 

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் காரசார விவாதம் நடைபெற்றது. திரைப்படத்திற்கு, தயாரிப்பாளர்கள் சான்று பெறும் முன் வெளியீட்டு தேதியை எப்படி அறிவிக்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

மேலும், ஒரே நாளில் அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் முடித்து, உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை முதல் வழக்காக ஜனநாயகன் பட வழக்கை விசாரித்தது.

 

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தீர்ப்பை வாசித்தது. அப்போது, ‘தணிக்க வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

எனவே சென்சார் போர்ட் தலைவர் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷாவே விசாரிக்க வேண்டும். விசாரணையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் சென்சார் போர்டுக்கு உரிய அவகாசம் வழங்கி, புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon