சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான தரிசனம் முடிந்தது!
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் முடிந்து மண்டல அரசு குடும்ப தரிசனத்திற்கு பின் நடை அடைக்கப்பட்டது. சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்திற்கான பக்தர்கள் தரிசன அனுமதி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அரசு குடும்பத்தினர் தரிசனம் செய்தனர் .
பின்னர் மகரஜோதி தரிசனத்தன்று ஐய்யப்பனுக்கு வைத்து அழகு பார்க்கப்பட்ட தங்கநகைகள் அடங்கிய திருவாபரணப்பெட்டி பதினெட்டாம் படி வழியாக இறக்கப்பட்டு சரண கோஷம் முழங்க தலைச்சுமையாக அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தொடர்ந்து நடை அடைக்கப்பட்டு அரசு குடும்ப பிரதிநிதிகளான பிரதீப் குமார், சுரேஷ் வர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரும் பதினெட்டாம்படி இறங்க சபரிமலை நடை அடைக்கப்பட்டது.







