--- --:--:-- --

அன்புமணிக்கு கோர்ட் பச்சைக்கொடி! பொதுக்குழுவுக்கு தடை கேட்ட மனு டிஸ்மிஸ்.. ராமதாஸின் தடாலடி திட்டங்கள் புஸ்ஸ்…!

8

திட்டமிட்டபடி ஆக. 9ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டத்தை அன்புமணி நடத்தலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதற்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. தனது தடாலடி திட்டங்கள் புஸ் என்று ஆனதால் ராமதாஸ் அப்செட்டில் உள்ளார். சட்டப்படி அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் செய்தியாளர்களை சந்தித்து வரும் ராமதாஸ், புதிய புதிய குற்றச்சாட்டுகளை அன்புமணிக்கு எதிராக அடுக்குகிறார். அன்புமணி தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவிகளை வைத்ததாக கூறினார். போனவாரம், தனது செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக அடுத்த அணுகுண்டை போட்டார் ராமதாஸ்.

 

ரஷ்யா – உக்ரைன் போர்கூட முடிவுக்கு வந்துவிடும் போலிருக்கிறது; தந்தை- மகன் இடையே பாமகவில் நடக்கும் யுத்தம் முடியவில்லை. அன்புமணி மவுனமாக இருந்தாலும், ராமதாஸ் விடாப்பிடியாக வலியச்சென்று வம்பிழுப்பதாக, அக்கட்சியினரே வேதனையோடு சொல்லும் நிலை உள்ளது.

 

இதனால், ஆரம்பத்தில் ராமதாஸின் பேட்டிகள், பேச்சுகளுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் இப்போது இல்லை. ராமதாஸும் பிடிவாதப்போக்கை கைவிடாததால் அதிருப்தியில் உள்ள கட்சியினர் அவரது பேச்சை பாமகவினரே கண்டுகொள்வதில்லை.

 

இந்த நிலையில், அன்புமணிக்கு எதிராக தனது பலத்தை காட்ட, அடுத்து புதிய ஆயுதம் ஒன்றை எடுத்தார் ராமதாஸ். அதுதான், பாமக பொதுக்குழு கூட்டம். ஆகஸ்ட் 19 ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம், எனது தலைமையில் நடைபெறும் என்று, அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ராமதாஸ்.

 

அன்புமணி விடுவாரா? உடனே அவர் தரப்பில் இருந்தும் ஒரு அறிவிப்பு வந்தது. ராமதாஸுக்கு போட்டியாக, பொதுக்குழு நடைபெறும் என்ற அன்புமணி, ராமதாஸ் கூட்டிய 19ஆம் தேதிக்கு 10 நாட்கள் முன்பே ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இதை ராமதாஸ் ஏற்கவில்லை. பொதுக்குழு கூட்ட குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னறிவிப்பு தரவேண்டும். எனவே, நான் கூட்டுவதுதான் உண்மையாக பாமக பொதுக்குழு கூட்டம் என்றார்.

 

அதுமட்டுமல்லாம, அன்புமணி நடத்தும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, ராமதாஸால் நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் முரளி சங்கர்தான் இந்த வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு, வெள்ளிக்கிழமை முற்பகல் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமதாஸ் மற்றும் அன்புமணியை, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் தனது அறையில் தனியாக சந்தித்து பேச விரும்புவதாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறினார். இருவருக்கும் நீதிபதி இப்படி அழைப்பு விடுத்தது நீதித்துறை வட்டாரத்தில் ஆச்சரியப்படுத்தியது.

 

இதனிடையே, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் அழைப்பை ஏற்று அவரது அறைக்கு, வெள்ளிக்கிழமை மாலையில் நேரில் அன்புமணி சென்றார். ஆனல, ராமதாஸ் வரவில்லை. அவர் வீடியோ கான்பரஸிங் மூலமாக நீதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை சுமார் அரை மணி நேரம்வரை நீடித்ததாக கூறப்படுகிறது.

 

அதன் பின்னர், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய ராமதாஸின் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ராமதாஸுக்கு ஆதரவாக மனுதாரர் முரளி சங்கர் தரப்பில், பொதுக்குழுவை கூட்ட கட்சி நிறுவனருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் அன்புமணி கூட்டி உள்ள பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமானது என்றும் வாதிடப்பட்டது.

 

அன்புமணி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. “கட்சி சட்ட விதிகளின் படியே அன்புமணி பொதுக்குழுவை கூட்டி இருக்கிறார். பாமக விதிகளின்படி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது. நிறுவனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பொதுக்குழு நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நிறுவனர் ராமதாஸுக்கு நேரடியாகவும் கடிதம் மூலமும் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.

 

பொதுக்குழு கூட்டம் உள்ளரங்கில் நடைபெறுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தலையிடப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

 

மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார். அன்புமணி தரப்பின் பொதுக்குழு நடத்த தடையில்லை என்பதால், திட்டமிட்டபடி சனிக்கிழமை பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

 

இந்த தீர்ப்பின் மூலம் அன்புமணி ஏற்பாடு செய்துள்ள பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கிறது. அதற்கு நீதிமன்றமே பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதனால், ராமதாஸ் மிகவும் வருத்தமடைந்ததாகவும், பாமகவில் தனக்கு மேலும் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்ற வேதனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

 

அதே நேரம், பொதுக்குழு நடத்த கடைசி நேரம் வரை முட்டுக்கட்டை போடுவது, அது முடியாமல் போனால் அன்புமணி நடத்தும் பொதுக்குழுவின் தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி வழக்கு போடுவது என்று ராமதாஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். அப்பா – மகன் மோதலின் அடுத்த கட்டம், அன்புமணி நடத்தும் பொதுக்குழுவை பொருத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Right Menu Icon