முழு ஊரடங்கால் கொரொனா பாதிப்பு இரட்டிப்பாகவில்லை!
நாடு முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டதால் கொரொனா பாதிப்பில் வேகத்தை குறைக்க முடிந்து இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் முடக்க நிலை குறித்து முடிவெடுக்கப்பட்டதால் தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரம் என்ற ரீதியில் இருப்பதாகவும் இல்லாவிட்டால் இந்த எண்ணிக்கை இந்நேரம் 73 ஆயிரத்தை கடந்து இருக்கும் என்றும் விகே பால் கூறியுள்ளார். முடக்க நிலை மூலம் பாதிப்பு இருமடங்காக உயர்வது தடுக்க பட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் குழு தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கூடுதல் செயலாளர் மட்டத்திலான அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் சென்னை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் சுரத்திற்கு செல்லவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே ஆறு குழுக்கள் மத்திய பிரதேசம் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றன. கடந்த 28 நாட்களாக நாடு முழுவதிலும் உள்ள 15 மாவட்டங்களில் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்ட வர்கள் உருவாகவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள 80 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக யாரும் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கத்திலிருந்து குணமாகக் கூடியவர்களின் எண்ணிக்கை 20.57 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சமூக பரவல் ஏற்படவில்லை எனவும் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் 73 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.







