தமிழகத்தில் இன்று 5185 பேருக்கு கொரோனா உறுதி.. உயிரிழந்தோர் 68 பேர்.. சென்னையில் 16-வது நாளாக ஆயிரத்தை கடந்த பாதிப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று போல் இன்றும் 68 பேர் உயிரிழந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்து பதிவாகி வருவது கவலையளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரு மாதங்களாகவே குறைந்தபாடில்லாமல் தினசரி 5 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது. அதே போல் உயிரிழப்பும் கடந்த சில நாட்களாக 60 முதல் 70 வரை என தினசரி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 5185 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 5357 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
இதனால் மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 91 ஆயிரத்து 811 உயர்ந்துள்ளது. 44 ஆயிரத்து 197 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 97 ஆயிரத்து 87 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்று போலவே இன்றும் கொரோனா பாதிப்பால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 34 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் சென்னையில் மட்டும் 22 பேர் பலியாகியுள்ளனர்.
அதிக பாதிப்பு
மேலும் சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், 16 வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்தை கடந்து 1268 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 397, செங்கல்பட்டு 343, சேலத்தில் 295 என மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






